வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்க சிறப்பு வழிபாடு!

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயம் செழிக்கவும், வெற்றிலைக்கு போதிய விலை கிடைக்கவும்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயம் செழிக்கவும், வெற்றிலைக்கு போதிய விலை கிடைக்கவும் சிந்தலவாடி  மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை 1.08 லட்சம் வெற்றிலை அலங்கார வழிபாட்டில் ஈடுபட்டனர் விவசாயிகள்.
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், புகழூர் வட்டாரங்களில் அதிகளவில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. கற்பூரம், வெள்ளைக்கொடி ஆகிய இரு வகையிலான வெற்றிலை சாகுபடி நடைபெற்றாலும் அதிகளவில் கற்பூரம் சாகுபடிதான் செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணராயபுரம்,குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனூர் பகுதியில் மட்டும் சுமார் 1,500 ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்வதால் வெற்றிலை விளைச்சல் அமோகமாக உள்ளது. இருப்பினும் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இதனால் வெற்றிலைக்குப் போதிய விலை கிடைக்கவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் மீண்டும் செழித்து வளரவும் வேண்டி கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள சிந்தலவாடி மகா மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை வெற்றிலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1லட்சத்து 8 ஆயிரம் வெற்றிலைகளைக் கொண்டு கோயிலுக்குள் சுவாமிக்கும், பின்னர் கோயில் முழுவதும் அலங்காரம் செய்தனர். பின்னர் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான வெற்றிலை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com