பேருந்துக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்

பேருந்துக் கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

பேருந்துக் கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்து மக்களை பாதுகாத்தார். எப்போதெல்லாம் தமிழகத்தில் டீசல் விலை உயர்த்தப்பட்டதோ அப்போதெல்லாம் மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தவர் ஜெயலலிதா. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் அது மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என எண்ணிய அவர் போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் இழப்பை அரசின் நிதியைக் கொண்டு சரி செய்தார்.  ஆனால் இப்போது ஆளும்  எடப்பாடி அரசு மக்களைப் பற்றி சிந்திக்காமல் மக்கள் மீதே சுமையை இறக்கி, இன்று மாணவ, மாணவிகள் போராடும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியுள்ளது. அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் எனகூறி வரும் இந்த அரசு உண்மையிலே அம்மா வழியில் ஆட்சி நடத்தினால் மக்களை பாதிக்கும்  பஸ் கட்டண உயர்வை  வாபஸ் பெற வேண்டும்.   இனி எந்தத் தேர்தல் வந்தாலும் டிடிவி தினகரன்தான் ஜெயிப்பார். ஆர்கே நகர் தேர்தல் வெற்றி இனி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றார். எஸ்.பி. லோகநாதன் தலைமை வகித்தார். தாரணி சரவணன் வரவேற்றார். மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஆரியூர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி பி. குமாரசாமி, கட்சி பேச்சாளர்கள் தேனிராமர், புலவர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
நிர்வாகிகள் கோயம்பள்ளி பாஸ்கரன், ராமலிங்கம், வழக்குரைஞர் விஜயகுமார், காதப்பாறை முன்னாள் ஊராட்சித் தலைவர் ஏ. தங்கவேல்,  வேங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆர்.எஸ்.ராஜா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com