Enable Javscript for better performance
சாக்குப் பைகளில் கடத்தப்படும் காவிரி மணல்!: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?- Dinamani

சுடச்சுட

    

    சாக்குப் பைகளில் கடத்தப்படும் காவிரி மணல்!: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

    By DIN  |   Published on : 24th March 2018 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூட்டைகளில் மணல் அள்ளப்படுவதை தடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே நெரூர், வாங்கல், மண்மங்கலம், புஞ்சை கடம்பங்குறிச்சி, நங்கவரம், லாலாப்பேட்டை, மாயனூர் உள்ளிட்ட இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகள் மூலம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால், தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடைவிதித்தது.
    இந்நிலையில், அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளும் கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
    கடந்த சில மாதங்களாகவே கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள வேலாயுதம்பாளையம், நெரூர் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் நூதன முறையில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் சிமெண்ட் சாக்குகளை எடுத்துச் செல்லும் மர்ம நபர்கள், குடிநீர் உறிஞ்சும் கிணறுகள் உள்ள பகுதிகளில் தெளிந்த மணலை மூட்டை, மூட்டையாக கட்டுகின்றனர். பின்னர் அவற்றை இருசக்கர வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிச்செல்வது போல ஏற்றிச்சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவித்துவைத்து பின்னர் அதனை லாரிகளுக்கு விற்பனை செய்துவிடுகின்றனராம்.
    இந்த சம்பவங்கள் அனைத்தும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் நடைபெறுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் குறிப்பாக குடிநீர் உறிஞ்சும் கிணறுகளை குறிவைத்து மணல் அள்ளப்பட்டு வருவதால் கோடைகாலத்தில் கரூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
    இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியது: கரூர் மாவட்டத்தில் மணல் அள்ள தடை உத்தரவு உள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவையும் மீறி தற்போது மணல் கடத்தும் கும்பல்கள் தொடர்ந்து மணலை அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
    மூட்டை, மூட்டையாக கட்டிக்கொண்டு லாரிகளில் ஏற்றிச்செல்வோருக்கு ஒரு மூட்டை ரூ.50-க்கு விற்கிறார்கள். ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் விதிமுறை மீறி மணல் அள்ளப்பட்டதால் ஆற்றில் மணல் இன்றி வெறும் கூழாங்கற்கள்தான் கிடக்கின்றன.
    இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கழிவுகளை பில்டர் செய்ய மணல் இன்றி குடிநீர் கலங்கலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்போது இருக்கும் மணலையும் திருட்டு கும்பல் அள்ளி வருவதால் ஆறானது மணல் இன்றி வெறும் விவசாய நிலம் போல சேறும், சகதியுமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸாரும் பெயரளவில் வழக்குப்போட்டு கைது செய்கிறார்கள்.
    மணல் கடத்தலுக்குரிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்கள்
    நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு மீண்டும் அதே செயல்களில்தான் ஈடுபடுகிறார்கள். எனவே, மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க முடியும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai