Enable Javscript for better performance
மயில்களால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை தேவை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  மயில்களால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை தேவை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 24th March 2018 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரூர் மாவட்டத்தில் மயில்களால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க கோவா, உத்தரகண்ட் மாநிலங்களைபோல வன உயிரின பாதுகாப்பு பட்டியலில் இருந்து மயில்களை நீக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
  கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
  கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
  கே. பழனியப்பன் (பாலசமுத்திரப்பட்டி): கறவை மாடுகள் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெறச் சென்றால் அதிகாரிகள் உரிய விளக்கமளிப்பதில்லை. அலைக்கழிக்கிறார்கள். மேலும், இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சான்றிதழ் வாங்க சென்றால் 45 நாள்களுக்கும் மேலாகிறது.
  மாவட்ட வருவாய் அலுவலர்: எந்த குறையாக இருந்தாலும் எனது செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இரண்டொரு நாளில் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.
  க.செ.சந்திரசேகர் (மொஞ்சனூர்): கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்ய கால்நடை மருத்துவமனைகளுக்குச் சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை.
  கால்நடைத் துறை மண்டல இயக்குநர்: கால்நடைத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. காலை 10 மணி முதல் 12 மணிவரை கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் களப்பணியாற்றச் சென்றுவிடுவர். மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின் இந்த குறைகள் எதுவும் இருக்காது.
  பி. ஜெயபால் (மகாதானபுரம்): கிருஷ்ணராயபுரம் பொய்கைபுதூரில் தென்கரை வாய்க்கால் பிரியும் இடத்தில் சிந்தலவாய் கிளை வாய்க்காலின் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க ரூ. 2,000 மட்டுமே செலவாகும். இதுதொடர்பாக ஆறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  முத்துசாமி (தென்னிலை): கரூர் மாவட்டத்தில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மயில்களால் தக்காளி, மிளகாய், நெற்பயிர் போன்றவை சேதமடைந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படுமா?.
  வன அலுவலர்: இதற்கு நிவாரணத்தொகை எதுவும் வழங்கப்படாது.
  வன அலுவலரின் இந்த பதிலால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அனைவரும் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  ராஜேஸ்வரி (கள்ளப்பள்ளி): எங்கள் பகுதியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் இறந்து கிடந்த மயிலுக்காக விவசாயியை ஒருநாள் முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மயில்களை அடிக்கக் கூடாது என்கிறீர்கள்; ஆனால், சேதத்துக்கு நிவாரணமும் தரமாட்டோம் என்கிறீர்கள். அப்படியென்றால் விவசாயிகள் மயில்களுக்கு பயந்து விவசாயம் செய்யக்கூடாதா?.
  முத்துசாமி: கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் தற்போது மயில்களால் ஏற்படும் தொல்லைகளால் அவற்றை வன விலங்கு பட்டியலில் இருந்து ஓராண்டுக்கு நீக்கியுள்ளனர். அதுபோல தமிழகத்திலும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், அப்போதுதான் மயில்களை கட்டுப்படுத்த முடியும்.
  கவுண்டம்பட்டி சுப்ரமணியம்: மாயனூர் தடுப்பணையை தற்போது தூர்வாரப்போவதாக கூறுகிறார்கள். அவ்வாறு தூர்வாரினால் கோடைகால நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது. எனவே மழை காலங்களில் தூர்வார வேண்டும்.
  கூட்டத்தில், வேளாண்மை துணை இயக்குநர் கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜெயந்தி மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai