Enable Javscript for better performance
பசுபதீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
    படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்க சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் கரூர் பசுபதீஸ்வரர் கோயில். சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால்  எண்ணம் ஈடேறும் என்கிறார். 
    அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுக்குள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சமடைந்தார். சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பினார். 
    காமதேனு வழிபட்டதால் இக்கோயிலில் சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் சிவபெருமான் அலங்காரவல்லி, செளந்திரநாயகியுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    ஆண்டுதோறும் நடைபெறும் இக்கோயிலின் பங்குனித் திருவிழா நிகழாண்டில்  கடந்த 22-ம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 23-ம் தேதி நந்தி, அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், 24-ம் தேதி  பூத, பூதகி வாகனத்திலும், 25-ம் தேதி  ரிஷிப, ரிஷ்ப வாகனத்திலும், 26-ம் தேதி கயிலாய வாகனத்திலும் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதையடுத்து 28-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 29-ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா வருதல் மற்றும் பல்லக்கில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை 30-ம் தேதி 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.  
    முன்னதாக பசுபதீஸ்வரர் மற்றும் அலங்காரவல்லி, செளந்திரநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 
    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பசுபதீஸ்வரர் அம்பாள்களுடன் தேரில் எழுந்தருளினார்.  அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் ஆகியோர் தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. 
    நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதி வை. நெடுஞ்செழியன் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 6 மணியளவில்  வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  சனிக்கிழமை நடராஜ மூர்த்திக்கு அபிஷேக தரிஷனம், ஏப்.1-ல் விடையாற்றி உற்சவம், 2-ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 3-ம் தேதி சண்டிகேஸ்வரர் திருவீதி உலா வருதலுடன் விழா முடிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai