கரூரில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு
By DIN | Published On : 04th April 2019 08:12 AM | Last Updated : 04th April 2019 08:12 AM | அ+அ அ- |

கரூரில் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தை கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், தேர்தல் செலவினப் பார்வையாளர்களான மனோஜ்குமார், அம்பாட்கர் எ. தாமோதர் மற்றும் துணை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சூர்யபிரகாஷ் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.
இந்த வாக்குச்சாவடி மையத்தில், வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய 11 வகையான புகைப்பட ஆவணங்கள், இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தபட்டுள்ள வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் குறித்து வாக்காளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடிக்குள் சென்றவுடன் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பது குறித்து வாக்காளர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டு, அவர்கள் மாதரி வாக்குப்பதிவும் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஏராளமான வாக்காளர்கள் வந்து பார்வையிட்டு பயனடைந்தனர்.
கரூர் வருவாய் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, வட்டாட்சியர்கள் பிரபு(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.