சுடச்சுட

  


  திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணியை ஆதரித்து வெங்கமேட்டில் இறுதிக்கட்ட பிரசாரம்  செவ்வாய்க்கிழமை நடந்தது.
  திமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் தொடங்கிய பிரசார ஊர்வலம்
  சர்ச் கார்னர், பழைய திண்டுக்கல் சாலை, அமராவதி பாலம், திருமாநிலையூர், சுங்ககேட் வழியாக தாந்தோணிமலையில் முடிவடைந்தது. 
  அங்கு  வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திருச்சி எம்பி சிவா பேசியது:
  கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றால் ராகுல் பிரதமராவார்.  அரவக்குறிச்சி தொகுதியில்  செந்தில்பாலாஜி வெற்றி பெற்றால் ஸ்டாலின் முதல்வராவார். 1947-ல் நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது இங்குள்ள இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு வாருங்கள் என ஜின்னா அழைப்பு விட்டபோது, எங்கள் நாடு இந்தியாதான் எனக்  கூறினர் நம் தேசத்தின் இஸ்லாமியர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் அவர்களுக்கு மட்டுமின்றி, கிறிஸ்தவர்களுக்கும் என சிறுபான்மையினருக்கு மோடி ஆட்சியில் பாதுகாப்பு என்பதே இல்லை.
  கடந்த தேர்தலின்போது, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என பொய்ப் பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த மோடி வேலை வழங்கினாரா?. 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடி இதுநாள்வரை 10 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கோடிக்கணக்கானோர் நாட்டில் வேலை இழந்துள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் எனக் கூறினார் மோடி. ஆனால் அவ்வாறு மோடி சொல்லவில்லை என தமிழிசையும், பொன். ராதாகிருஷ்ணனும் கூறுகின்றனர். 
  தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது, வராத மோடி,இப்போது தேர்தலுக்காக  மட்டும் ஐந்து முறை தமிழகம் வந்து சென்றுள்ளார். அவரது இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.  
  மாநில துணைச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன்,  முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பேசினர். 
  பிரசாரத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலர் கேசி. பழனிசாமி,  மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, வக்கீல் மணிராஜ் உட்பட கட்சியினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai