இறுதிக்கட்ட பிரசாரம்: கரூரில் திமுக-அதிமுக மோதல்: கல்வீச்சில் 5 பேர் காயம்

கரூரில் செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிக்கட்ட பிரசாரம் திமுக, அதிமுகவினர் மோதலில் முடிந்தது. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் பிரசார வாகனங்கள்

கரூரில் செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிக்கட்ட பிரசாரம் திமுக, அதிமுகவினர் மோதலில் முடிந்தது. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் பிரசார வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; கல்வீச்சில் 5 பேர் காயமடைந்தனர்; இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூரில் அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை மற்றும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டனர். 
முன்னதாக இரு கட்சி வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா அருகே இடம் கேட்டனர். இரு கட்சியினரும்  இங்கு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டால் தகராறு ஏற்படும் என்பதால் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டு , கரூர் வெங்கமேட்டில் பிரசாரம் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டது.   திமுகவினருக்கு பிற்பகல் 3 மணிக்கும், அதிமுகவினருக்கு பிற்பகல் 3.30 மணிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.
திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் வெங்கமேடு காமராஜர் சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது பிரசாரத்தில் திருச்சி சிவா எம்பி, வேட்பாளர் செ. ஜோதிமணி, திமுக மாவட்ட பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு தாந்தோணிமலை நோக்கி புறப்பட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களும் பின்னால் சென்றனர். இதில் ஒரு பகுதியினர் காமராஜர் சிலை முன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிமுகவினரும் தங்களது பிரசார ஊர்வலத்தை வெங்கமேடு எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்கினர்.  இதனிடையே காமராஜர் சிலை முன் நின்றுகொண்டிருந்த திமுகவினருக்கும், அங்கு வந்த அதிமுகவினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனர். இதில் வெங்மேடு காவல் நிலைய உளவுப் பிரிவு தலைமைக் காவலர் செந்தில், ராஜா (40), கோபி (38), வேங்கை ராமச்சந்திரன் (40), தர்மலிங்கம் (42) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்களும், திமுகவினரும் வெங்கமேடு பழைய திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களைச் சமாதானம் செய்து கலையச் செய்தனர்.  மறியல் நடந்தபோது அவ்வழியே வந்த அதிமுக பிரசார பேருந்தையும் சிலர் கல்வீசி தாக்கினர்.  போலீஸாரின் அஜாக்கிரதையே இப்பிரச்னைக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com