வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வுக்குப்பின் அறிக்கை
By DIN | Published On : 26th April 2019 05:21 AM | Last Updated : 26th April 2019 05:21 AM | அ+அ அ- |

கரூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வின் நிறைவில் அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பேன் என்றார் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ராஜாராமன்.
கரூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கரூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தின் பாதுகாப்பு குறித்து தலைமை தேர்தல் அலுவலர் ராஜாராமன் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
நிகழ்வில் கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சி முகவர்கள் வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையத்தின் பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து முறையிட்டனர். முகவர்கள் அளித்த புகார்களை பதிவு செய்த கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ராஜாராமன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையை பின்னர் ஆய்வு செய்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தின் பாதுகாப்பு குறித்து சில அரசியல் கட்சியினர் குறைகளைத் தெரிவித்துள்ளனர். இதனால் பாதுகாப்புத் தன்மையை ஆய்வு செய்த பின், நிறைவில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்றார்.
இவர்களுடன் பாதுகாப்பு அறையை பார்வையிட்டு கல்லூரிக்கு வெளியே வந்த காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் அன்பழகனையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரனையும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். மாற்று அதிகாரிகளை நியமித்து வாக்குப்பதிவு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்றார்.