முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன் பெறலாம்
By DIN | Published On : 04th August 2019 03:41 AM | Last Updated : 04th August 2019 03:41 AM | அ+அ அ- |

புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தை நிகழாண்டு செயல்படுத்தும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 500 பயனாளிகள் வீதம் 4000 பெண் பயனாளிகள் கீழ்க்கண்ட தகுதிகளுடன் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட ஏழைகளின் பட்டியல் எண் உடைய பெண்கள் தேர்வு செய்யப்படுவர். சொந்த கிராமத்தில் நிலையாக வசித்து வர வேண்டும். மேலும், அரசு வழங்கும் திட்டத்தின்கீழ் இலவச கறவை பசுக்கள், இலவச வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது. ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை. அரசு விதிமுறைகளின்படி 30 சதவீத பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும், பேரூராட்சிகளில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் சிறப்பு நிலை பேரூராட்சி எனில் 50 பயனாளிகளும், தேர்வு நிலை பேரூராட்சி எனில் 75 பயனாளிகளும், பேரூராட்சி நிலை-1 எனில் 107 பயனாளிகளும், பேரூராட்சி நிலை-2 எனில் 125 பயனாளிகளும் தேர்வு செய்யப்படுவர். மேலும், பேரூராட்சிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் எண் வைத்திருக்கும் பெண் பயனாளியாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பெண் பயனாளிகளுக்கு 25 எண்ணம் அசல் நாட்டு ரக கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.