பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி: திருச்சி அணி முதலிடம்
By DIN | Published On : 04th August 2019 03:40 AM | Last Updated : 04th August 2019 03:40 AM | அ+அ அ- |

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பார்வையற்றோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணி முதலிடம் பிடித்தது.
கரூர் மாவட்ட காது கேளாதோர் விளையாட்டுச் சங்கம் மற்றும் யுகம் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கரூர் வெண்ணெய்மலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திருச்சி, கோவை, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பார்வையற்றவர்கள் என்பதால், பந்தினுள் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போடப்பட்டு சத்தம் எழுப்பும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இதில் இறுதிப் போட்டியில் திருச்சி, கோவை அணிகள் மோதின. 12 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கோவை அணி 99 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி அணிக்கு ரூ.5,000, சுழற்கோப்பை வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பெற்ற கோவை அணிக்கு ரூ.2,000 பரிசு வழங்கப்பட்டன.
இதில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு பிரெய்லி முறையிலான சான்றிதழ் வழங்கப்பட்டது.
பரிசுகளை மாவட்ட வருவாய் அதிகாரி ச. சூர்யபிரகாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோர் வழங்கினர். இதில் யுகம் அறக்கட்டளை உறுப்பினர் அன்புசெல்வன், காதுகேளாதோர் சங்கச் செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.