கரூர் மாவட்டத்தில்  ரூ.66.89 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

கரூர் மாவட்டத்தில் ரூ.66.89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு புதிய கட்டடங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்


கரூர்: கரூர் மாவட்டத்தில் ரூ.66.89 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு புதிய கட்டடங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆத்தூர் பூலம்பாளையம் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் வீசோளிபாளையம் சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, நன்னியூர் துவாரபாளையம், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், கடம்பங்குறிச்சி பண்டுகாதாரன் பகுதியில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், மண்மங்கலம் அண்ணா நகரில் ரூ.7.55 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த புதிய கட்டடங்களை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் மாவட்ட வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கரூர், நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரியாற்றின் குறுக்கே ரூ.490 கோடியில் கதவணை கட்டுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. இதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டத்தின் நெரூர் பகு தியையும், திருச்சி மாவட்டத்தின் உன்னியூர் பகுதியையும் இணைக்கும் வகையில் ரூ.135 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. 

ரயில்வே இருப்புப் பாதையை கடக்க இயலாமல் நீண்டதூரம் பயணம் செய்துவந்த சிரமத்துக்கு தீர்வு காணும் வகையில் ரூ.13.20 கோடியில் பசுபதிபாளையம், குளத்துப் பாளையம் பகுதிகளில் சுரங்க வழிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அதிகப்படுத்தும் வகையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுமட்டுமல்லாது, ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படவுள்ளன என்றார் அவர்.

தொடர்ந்து, திருமுக்கூடலூரில் ரூ.14.95 லட்சம் மதிப்பில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணியையும், நெரூர் வடக்கு ஊராட்சி ஒத்தக்கடையில் ரூ.4.44 லட்சத்தில் தானியக் களம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்த விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா, வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com