அமராவதி அணை நீர் பங்கீட்டில் தொடர்ந்து கரூர் புறக்கணிப்பு: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

அமராவதி அணை நீர் பங்கீட்டில் தொடர்ந்து கரூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதால், ஆட்சியரகத்தில் குடியேறும்

அமராவதி அணை நீர் பங்கீட்டில் தொடர்ந்து கரூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதால், ஆட்சியரகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அமராவதி ஆறு கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆனைமலை குன்றுகளுக்கிடையே மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி தமிழகத்தின் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 57,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்தையும் அளிக்கிறது.
ஆண்டாண்டு காலம் தொடர்ந்து ஆற்றில் நீரோட்டம் இருந்தபோது வங்கக்கடலில் தண்ணீர் வீணாகக் கலந்து வந்ததால், அதைச் சேமிக்கவும், வறண்ட காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்காகவும் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள அமராவதியில் ஆற்றின் குறுக்கே 1957-ல் அன்றைய முதல்வர் காமராஜரால் அணை கட்டப்பட்டது. 
அப்போது அணையின் கடைமடைப் பகுதியாகவும், பழைய ஆயக்கட்டுப் பகுதியாகவும் விளங்கும் கரூர் மாவட்டத்தில் சுமார் 37,000 ஏக்கரில் விளையும் மஞ்சள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட பின்புதான் அணையின் புதிய ஆயக்கட்டுப் பகுதியான ஏஎம்சி பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. 
இதன்படி அணையில் தண்ணீர் நிரம்பும்போதெல்லாம் கரூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு நீர் உரிய முறையில் பங்கீடு செய்யப்பட்டு திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அணை நீர் பங்கீடு உரிய முறையில் கடைப்பிடிக்காமல் தொடர்ந்து கரூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. 
திருப்பூருக்கு மட்டும் அடிக்கடி அணை நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மீறி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் 50 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விதி இருந்தும், கடந்த இரு மாதங்களுக்கு முன் அணையில் வெறும் 37 அடி மட்டும் தண்ணீர் இருப்பு இருந்தநிலையிலும் திருப்பூருக்கு தண்ணீர் திறக்கப்பட்டது கரூர் மாவட்ட பழைய ஆயக்கட்டுப் பாசன பகுதி விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
இதுதொடர்பாக மாவட்ட அமராவதி பாசன விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வருக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 11-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் கூறியிருப்பது கரூர் மாவட்ட விவசாயிகளிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியரகத்தில் குடியேறும் போராட்டம்: இதுகுறித்து அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள் மற்றும் கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ராமலிங்கம் கூறியது: ஏற்கெனவே கடந்த  மாதம் 22-ஆம் தேதி கரூர் மாவட்ட விவசாயிகளை ஆலோசிக்காமல் திருப்பூர் மாவட்டத்திற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. 
கரூர் மாவட்டத்தில் அமராவதி பாசன விவசாயிகள் கால்நடைக்கே குடிநீர் கிடைக்காமல் அவதியுறும் நிலையில் அவர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து யாரும் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. இந்நிலை இப்போது மட்டும் இல்லை.  காலம்,காலமாகவே நடந்து வருகிறது. கடந்தாண்டும் இதே நிலை ஏற்பட்டபோது, ஒத்தமாந்துறையில் மறியல் செய்ததால் கடைமடைக்குத் தண்ணீர் கிடைத்தது. இந்தாண்டும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தண்ணீர் பெற்றுவிட்டார்கள். இப்போதும் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு ஒரு கண்ணில் வெண்ணைய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்ததுபோல உள்ளது. 
கரூர் , திருப்பூர் மாவட்ட பிரச்னையையே தீர்க்க முடியவில்லை. எப்படி காவிரி நீரில் கர்நாடக, தமிழக பிரச்னை தீரப்போகிறது. ஏதோ வருண பகவான் கருணையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.  அணையில் தற்போது 77 அடி நீர் இருந்தும் கடைமடைக்கு தண்ணீர் திறக்காமல், புதிய ஆயக்கட்டுப் பகுதியான ஏஎம்சிக்கு மட்டும் தண்ணீர் திறப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை. 
ஏற்கெனவே கடந்த வாரம் அமராவதியில் தண்ணீர் திறக்கக்கோரி ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தோம். ஆனால் இப்போதும் புதிய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறப்பது எங்களை வஞ்சிக்கும் செயல். இதனால்தான் புதன்கிழமைக்குள்  (14-ஆம் தேதி) அணையில் தண்ணீர் திறக்காவிட்டால் வரும் 16-ஆம் தேதி ஆட்சியரகத்தில் விவசாயிகள் குடும்பத்தோடு குடியேறி அங்கேயே சமைத்து உண்ணும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுதொடர்பாக ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com