20 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆற்றிலிருந்து சின்னமுத்தூர் தடுப்பணைக்குத் தண்ணீர் திறப்பு

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, சின்னமுத்தூர் தடுப்பணைக்கு  நொய்யல் ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, சின்னமுத்தூர் தடுப்பணைக்கு  நொய்யல் ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், சிற்றோடைகளாக உருவெடுக்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கிப் பாய்ந்து பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர்,சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கிலோ மீட்டர் பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரியாற்றுடன் கலக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் சாய, சலவைத் தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேற்றப்பட்ட சுத்திகரிக்கப்படாத கழிவுகளால்  இந்தாறு மாசுபட்டது. கரூர் மாவட்டத்தில் சின்னமுத்தூரில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மூலம் பாசன வசதி பெற்றுவந்த அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, முன்னூர், அத்திபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 19,000 ஏக்கர் பாசன நிலங்களும் பாழ்பட்டன. இதில் விளைந்து வந்த சூரியகாந்தி, பருத்தி, நெல், மக்காச்சோளம், கம்பு போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன. 
இதனால் சாயக்கழிவுடன் கூடிய நொய்யலாற்றுத் தண்ணீரைத் திறக்கக்கூடாது என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சின்னமுத்தூர் தடுப்பணை கடந்த 1999-இல் மூடப்பட்டது. 
தற்போது ஆற்றில் மழைநீருடன் கூடிய வெள்ளநீர் கரைபுரண்டு ஓடிவருவதால், கார்வழி ஊராட்சிக்குள்பட்ட சின்னமுத்தூர் தடுப்பணைக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
 இதைத் தொடர்ந்து விவசாயிகள் கூறியது: சின்னமுத்தூர் ஆத்துப்பாளையம் அணை மூலம், நொய்யல் ஆற்றில் மழை, வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரையும், கீழ்ப்பவானி வாய்க்காலில் வரும்  கசிவு நீரையும் தேக்கி வைத்து, கரூர் மாவட்டத்தில் சுமார் 19,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
 1990-இல் அணைகட்டி முடிக்கப்பட்டு 9 ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தது. அதன் பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் பாழானது. 
மேலும் பொதுமக்களுக்கு உடல் தொந்தரவுகள் மற்றும் கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டதால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 1999-இல் அணை மூடப்பட்டது. இதற்கு நஷ்ட ஈடு கேட்டு பல்வேறு விவசாய சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.  இதில் சில விவசாயிகள் நஷ்டஈடு தொகை பெற்றனர்.
 இந்நிலையில் விவசாய சங்கங்கள் சார்பில், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியாறு மாசுபடுவதையும் தடுப்பதோடு, விவசாயத்திற்கு தகுந்த நீரை வழங்கினால், ஆற்றையே நம்பியுள்ள கிராமமக்கள் குடிநீர் மற்றும் கால்நடைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்திச் செய்ய ஏதுவாகும் என பாசனம் பெறும் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்கப்பட்டு, 1999-க்கு பிறகு தற்போது நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் கார்வழி சின்னமுத்தூர் தடுப்பணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 27 அடி உயரம் கொண்ட இந்த தடுப்பணையின் மொத்த கொள்ளளவு 235 மில்லியன் கன அடியாகும்.
 தற்போது ஒரு வினாடிக்கு 200கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதே போல தண்ணீர் தொடர்ந்து 15 தினங்கள் வந்தால் அணை நிரம்பி விடும். 
மேலும் வரும் நாள்களில் கீழ்ப் பவானி எல்.பி.பி. வாய்க்கால் கசிவு நீர் மற்றும் மலையத்தாபாளையம் ஓடை தண்ணீரும் அணைக்கு வந்தால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் உகந்ததாக இருக்கும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com