திமுகவுக்கு வெற்றிகள் காத்திருக்கின்றன
By DIN | Published On : 02nd February 2019 03:12 AM | Last Updated : 02nd February 2019 03:12 AM | அ+அ அ- |

திமுகவுக்கு வெற்றிகள் காத்திருக்கின்றன என்றார் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி.
கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தாலும், தமிழக மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் தகுதி படைத்த தலைவராக, மத்திய அரசை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடக் கூடிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். அதனால்தான் எங்களை திமுகவில் இணைத்துக் கொண்டோம்.
மத்தியில் உள்ள மோடி அரசு தமிழகத்தின் எடப்பாடி அரசை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் வேண்டாம் எனக் கூறும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.
எடப்பாடி அரசு உள்ளாட்சித் தேர்தலையும், இடைத்தேர்தலையும் நடத்தத் தயாரில்லை. காரணம் தேர்தல் நடந்தால் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்றுவிடும். மு.க. ஸ்டாலின் முதல்வராகிவிடுவார்.
ஏற்கெனவே தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், ஒபிஎஸ் வழக்கிலும் அவருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும். எனவே விரைவில் 32 தொகுதிகள் காலியாகப் போகின்றன. இந்த தொகுதிகளில் திமுகதான் வெற்றிபெறும்.
குறிப்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் யாரை நிறுத்தினாலும், அவரது வெற்றிக்கு அயராது உழைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம். மக்களவைத் துணைத் தலைவர் இந்தத் தொகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் செய்யவில்லை. என் உயிரே போனாலும் சிறப்பாகச் செயல்படுவேன் என்றார் அவர்.
மாவட்ட அவைத் தலைவர் டி. ராஜேந்திரன், துணைச் செயலர் கருணாநிதி, முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், நகரச் செயலர்கள் கரூர் கணேசன், கனகராஜ், ஒன்றியச் செயலர்கள் ரகுநாதன், கருணாநிதி, எம்எஸ். மணியன், கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமிஜெகதீசன், கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர்ராஜேந்திரன், விவசாய அணி செயலர் ம. சின்னசாமி,சட்டத் துறை இணைச் செயலர் என். மணிராஜ், குளித்தலை எம்எல்ஏ ராமர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலர் கரூர் முரளி, வர்த்தக அணி துணைச் செயலர் பல்லவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட துணைச் செயலர் பூவை. ரமேஷ்பாபு வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வி. கருப்பண்ணன் நன்றி கூறினார்.