சுடச்சுட

  

  குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கோரி காலிக்குடங்களுடன் மனு

  By DIN  |   Published on : 12th February 2019 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தங்கள் கிராமத்தில் ஓராண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி வில்வமரத்துப்பட்டி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு அளித்தனர்.
  கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு ஆட்சியர் த. அன்பழகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கடவூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, வில்வமரத்துப்பட்டி கிராம மக்கள் அளித்த மனு:
  மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மூலம் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில்,   ஊராட்சி சார்பில் அமைத்துத் தரப்பட்ட ஆழ்க்குழாயில் தண்ணீர் இல்லை. காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் ஒரேயொரு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதிலும் தண்ணீர் வருவதில்லை. ஓராண்டு காலமாகத் தீர்க்கப்படாத பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  லாலாப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணமாச்சாரி,நாகராஜ்  அளித்த மனு:
  லாலாப்பேட்டை ரயில்வே கேட் 2009, ஜன.11 ஆம் தேதி  மூடப்பட்டது. இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் 2015-ல் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் கேட் 
  அருகே தண்டவாளத்திற்கு அடியில் குகைவழிப்பாதை அமைக்கப்பட்டது.
  இந்த பாதை வழியாக அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ், பேருந்துகள், லாரிகள் சென்றுவரும் வகையில் திறக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
  ஆனால் தற்போது கட்டப்பட்ட குகைவழிப்பாதையில் மனிதர்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும். 
  மேலும் தற்போது ரயில்வே கேட்டை மீண்டும் மூடிவிட்டனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே  ரயில்வே கேட்டை திறக்கவும், குகை வழிப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  புஞ்சைத்தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி பகுதி மக்கள் வழங்கிய மனு:  காவிரியாற்றில் மண்மங்கலம் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாட்டுவண்டிகள் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு, அவை லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது.
  மணல் அள்ளுபவர்கள் காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டக்கிணற்றின் அருகே அள்ளுவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே  மணல் அள்ளுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai