சுடச்சுட

  

  மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில மொழிகள் அழியும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலர் பேட்டி

  By DIN  |   Published on : 13th February 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மட்டுமன்றி அந்தந்த மாநில மொழிகளும் அழிந்துவிடும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன். 
  கரூரில் செவ்வாய்க்கிழமை அவர் மேலும் கூறியது:
  கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக அரசை மத்திய அரசு புறக்கணிக்கிறது. குறிப்பாக கஜா புயலுக்கு கூட ஆறுதல் கூற வராத பிரதமரை, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநர் மூலம் ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டோர் எனக் கூறும் 7 பேரையும் விடுதலை செய்யத் தடையாக உள்ள பிரதமரை தமிழகத்தில் திட்டத்தை  தொடக்கி வைக்க அழைத்து வந்தது தமிழக அரசுக்குப் பெருத்த அவமானம்.  
  மோடி திருப்பூருக்கு வந்த நோக்கம், அதிமுகவுடன் கூட்டணி வைக்கத்தான். இதை வைத்துப் பார்க்கையில் இடைத்தேர்தல் வந்தால் ஆட்சி பறிபோகுமோ எனும் அச்சம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டிருப்பது தெரிகிறது.
  மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா, திருப்பூரில் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது.  மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மட்டுமல்ல, அந்தந்த மாநில மொழிகளும் அழிந்துவிடும்.  திமுகவுக்கு எந்தத் தூது வந்தாலும் அவர்கள் பாஜக பக்கம் சாய்கிற முகாந்திரம் இல்லை. 
  தற்போது வறட்சி நிலவும் நிலையில் ஏழைகளுக்கு ஒரு தவணையில் ரூ.2,000 கொடுப்பதால் மட்டும் வறுமையை ஒழித்து விடமுடியாது. பட்ஜெட்டில் ரூ. 44 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளபோது, இதற்கென கோடிக்கணக்கில் செலவழிப்பது என்பது தேர்தலை முன்னிலைப்படுத்தும் செயலே.
  கரூர், கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் உள்ள  நூற்பாலை, ஆயத்த ஆடை, ஜவுளி தொழிலும் சரிவை சந்தித்துள்ளன. சிறு, குறு தொழில் நடத்துவோர் கடன் வாங்கி கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள். அந்தக் கடனுக்கு நிதியுதவி கொடுத்தால் மீண்டும் தொழில் வளர்ச்சியடையும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி கார்ப்பரேட் கம்பெனிகளை திறக்க நினைப்பதால் மட்டும் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுவிடாது.  தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலோடு, இடைத்தேர்தலும் நடந்தால் மோடி அரசும், தமிழக அரசும் வீட்டுக்கு போய்விடும். 
  கரூரில் நொய்யல் ஆற்றுக் கழிவுநீரால் 25,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டன. ரூ. 22 கோடி மட்டும்தான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை மாநில அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றார்.
  பேட்டியின்போது மாவட்டச் செயலர் கே. கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai