திருச்சி - கோவைக்கு ரூ. 3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை

திருச்சி - கோவை வரை ரூ. 3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை அமைய உள்ளது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

திருச்சி - கோவை வரை ரூ. 3,500 கோடியில் பசுமை வழி விரைவுச்சாலை அமைய உள்ளது என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட  பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் கரூர் நகரப்பகுதிகளுக்குட்பட்ட சுமார் 20 சாலைகளை இணைத்து கரூர் ரயில்வே சந்திப்பு முதல் தேசிய நெடுஞ்சாலை எண் (7- புறவழிச்சாலை) வரை ரூ. 21.12 கோடியில் அமைக்கப்படவுள்ள "அம்மா சாலை' க்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
கரூர் மாவட்ட மக்கள், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையான இணைப்புச்சாலைப் பணி தற்போது நிறைவேறியிருக்கிறது.
தமிழகத்தில் திருப்பூருக்கு அடுத்து ரூ. 6,000 கோடியில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கும், பிற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் இந்தச் சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இணைப்புச் சாலையை  அம்மா சாலை என அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை அமையவுள்ள நிலங்களில் 90 சதவீத நிலம் நல்ல பல உள்ளங்களால் தானமாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை மூலம் கோவை சாலையில் சுமார் 40 சதவீத போக்குவரத்து குறையும். 
கரூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதி போக்குவரத்து வசதிக்காக ரூ. 13.10 கோடியில் குகைவழிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ. 77 கோடியில் சுற்று வட்டச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. 
திருச்சி முதல் கோவை வரை ரூ.3,500 கோடியிலான பசுமை வழி விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது.  புஞ்சை புகளுரில் சுமார் ரூ. 490 கோடியில் 1 டி.எம்.சி. நீரைத் தேக்கும் வகையில் தடுப்பணையும் அமைய உள்ளது. 
அரவக்குறிச்சி, பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ. 220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
மேலும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 81 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  கரூர் நகராட்சியில் 65 சாலைகள் அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. 
இன்னும் 3 மாதத்திற்குள் புதை சாக்கடை பணி, சாலைப்பணி முடிவுற்று, குடிநீர் பணிகளும் முழுமை பெறும். மிக விரையில் கரூர் மாவட்டத்தில் புதிய தாலுகா உதயமாகும். 
மிக விரையில் கரூரில் புதிய புறநகர் பேருந்து  நிலையம் அமைக்கப்படும். 
தரகம்பட்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்ட  முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  8 பகுதிகளில்  உயர்நிலைப்பாலங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம. கீதாமணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com