முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
லஞ்சம்: கடவூர் வட்டாட்சியர் கைது
By DIN | Published On : 28th February 2019 10:49 AM | Last Updated : 28th February 2019 10:49 AM | அ+அ அ- |

பட்டா மாறுதலுக்கு ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய கடவூர் வட்டாட்சியர் கற்பகத்தை திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் கடவூர் வட்டம், கொள்ளுதண்ணிப்பட்டியை சேர்ந்த சார்லஸ் (45) என்பவர் பட்டா மாறுதல் கேட்டு கடந்த வாரம் கடவூர் வட்டாட்சியர் கற்பகத்திடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது கற்பகம் ரூ. 2500 லஞ்சமாக கொடுத்தால் உடனே பட்டா மாறுதல் செய்வதாகக் கூறியுள்ளார்.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சார்லஸ் இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ. 2,500 ரூபாய்களை அலுவலகத்தில் வட்டாட்சியர் கற்பகத்திடம் சார்லஸ் புதன்கிழமை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் கற்பகத்தை கைது செய்தனர்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் வட்டாட்சியரகத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.