முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
544 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 88 லட்சத்தில் உதவி
By DIN | Published On : 28th February 2019 09:17 AM | Last Updated : 28th February 2019 09:17 AM | அ+அ அ- |

கரூரில் 544 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 88.69 லட்சத்திலான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்களையும் , பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியையும் புதன்கிழமை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் 544 பயனாளிகளுக்கு ரூ.88.69 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை, உதவி உபகரணங்களையும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியையும், பட்டு வளர்ச்சித் துறை சார்பாக 2018-ம் ஆண்டிற்கான சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத் தொகைக்கான காசோலையை 3 பயனாளிகளுக்கும் வழங்கி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியது:
கரூர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், தசைச் சிதைவு நோய் பாதித்தோருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், தொழு நோயால் குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டங்களின் கீழ் 2,679 பேருக்கு ரூ. 4,67 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி,கல்லூரிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் பார்வையற்ரோருக்கு மாவட்டத்திற்குள் பேருந்து பயணம் மேற்கொள்ள ரூ.5 லட்சத்தில் இலவச பயண சலுகை அட்டைகளும், சிறு, குறுந்தொழில் செய்ய வங்கிக் கடன் மானியமாக 24 பேருக்கு ரூ. 6.23 லட்சமும், தமிழக அரசின் புதிய திட்டமாக பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி கரூர் மாவட்டத்தில் 20 பேருக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோரைத் திருமணம் செய்யும் சாதாரண நபருக்கு நிதியுதவி திட்டம், பேசும் திறனற்ற மற்றும் காது கேளாதோரை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு நிதியுதவி திட்டம், கை,கால் குறையுடைய மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி திட்டங்களின் கீழ் 15 பேருக்கு ரூ.6.25 லட்சம் ரொக்கபணம் மற்றும் தலா 8 கிராம் தங்கநாணயம் வழங்கப்பட்டுள்ளது.
2018-2019-ம்ஆண்டிற்கு 40 பயனாளிகளுக்கு ரூ.21,14,480- மதிப்பில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. இப்போது 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், வை. நெடுஞ்செழியன், பசுவைசிவசாமி, எம்.செல்வராஜ், வி.சி.கே.ஜெயராஜ், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.