சுடச்சுட

  

  நங்காஞ்சி-குடகனாறு பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை

  By DIN  |   Published on : 12th January 2019 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரூர் மாவட்டத்தில் நங்காஞ்சி- குடகனாறு பகுதியில் தடுப்பணைக் கட்டுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட க.பரமத்தி ஒன்றியத்தில் ரூ.7.85 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்று, பணிகளைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
  க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், மொஞ்சனூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் சாலை மேம்பாடு, பழுதடைந்த சாலைகள் புனரமைப்பு செய்ய நிதியுதவி வழங்குதல், மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு  22 இடங்களில் தற்போது பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
  இத்துடன் சேர்த்து ரூ.20 கோடி மதிப்பிலான திட்டங்கள் அரவக்குறிச்சி தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வந்த மனுக்களின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.100 கோடி மதிப்பில் குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆய்வுகள் மதிப்பீடு தயார் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  இதுபோல, காவிரியில் ரூ.490 கோடியில் கதவணை அமைக்கவும், சின்னதாராபுரம் பகுதியில் அமராவதி ஆற்றிலும், நங்காஞ்சி- குடகனாறு பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
  இந்த விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார்.
   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் ஏ.ஆர்.காளியப்பன், கமலக்கண்ணன், அரவக்குறிச்சி வட்டாட்சியர் பிரபு, வட்டாரவளர்ச்சி அலுவலர் பழனிக்குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai