சுடச்சுட

  

  கரூர் திருமாநிலையூரில் 2 ஆண்டுகளில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

  By DIN  |   Published on : 13th January 2019 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசாணைப்படி, கரூர் திருமாநிலையூரில் இன்றிலிருந்து 2 ஆண்டுகளில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது.
  கரூர் தோரணக்கால்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கரூர் நகராட்சிக்கென புதிய பேருந்து நிலையத்தை திருமாநிலையூரில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைப்பது தொடர்பாக, கடந்த 2013 ஜூன் 20 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தக் கோரி, கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். 
  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 2017 பிப்ரவரி 28 ஆம் தேதி, 2 மாதங்களுக்குள்ளாக கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து மீண்டும் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. 
  எனவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பிரகாஷ், கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதோடு, கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
  இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2013 இல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, இன்றிலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் கரூர் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai