சுடச்சுட

  


  கரூர் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் தாந்தோணியில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும், வருவாய்த் துறை சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
  தாந்தோணியில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், துறைவாரியாக மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்துக்கொண்டாடினர். ஒவ்வொரு துறைக்கும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
  மாவட்ட விளையாட்டு அரங்கில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களும் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். அங்கு நடத்தப்பட்ட பானை உடைத்தல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், கோலமிடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பலரும் கலந்துகொண்டனர்.
  போட்டிகளை தொடக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி பேசுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உங்கள் அனைவரோடும் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அரசு ஊழியர்களின் மன இறுக்கம் இலகி மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது. குடும்ப விழாவில் கலந்துகொண்டது போல் மனம் நிறைவாய் இருக்கின்றது. அனைவரும் அன்றாடம் தங்களது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடல் நலத்துடன் இருக்கும் என்றார்.
  நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் கு. சரவணமூர்த்தி, லியாகத், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai