வாழைத்தார் விலை இருமடங்காக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் திருநாளையொட்டி கரூர்  காமராஜர் மார்க்கெட்டுக்கு  விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட வாழைத்தார்களின்

பொங்கல் திருநாளையொட்டி கரூர்  காமராஜர் மார்க்கெட்டுக்கு  விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட வாழைத்தார்களின் விலை இருமடங்காக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம், குளித்தலை, புகழூர், நெரூர், மகாதானபுரம், லாலாப்பேட்டை, வதியம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், நாமக்கல் மாவட்டம், மோகனூர், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் இந்த மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு, ஏலம் விடப்படும்.
கடந்த 2 வாரங்களாக இல்லாத வகையில், பொங்கல் திருநாளையொட்டி திங்கள்கிழமை வாழைத்தாரின் வரத்தும் அதிகரித்த நிலையில் விலையிலும் இருமடங்காக உயர்ந்து ஏலம் போனது.
இதுகுறித்து வாழைக்காய் மண்டி வியாபாரி முருகையன் கூறியது:   கடந்த வாரம் பூவன் தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், கற்பூரவல்லி ரூ.300-க்கும், பச்சலாடன் ரூ.150 முதல் ரூ.200 வரை ஏலம் விடப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை 
 பூவன் தார் ரூ.900-க்கும், ரஸ்தாளி ரூ.500-க்கும், கற்பூரவள்ளி ரூ.600-க்கும், பச்சை லாடன் ரூ.350-க்கும் ஏலம் போனது என்றார்.
லாலாப்பேட்டை விவசாயி முருகன் கூறியது:  கடந்த சில வாரங்களாக பனி அதிகளவு இருந்ததால் வாழைக்கு அதிக விலை கிடைக்காமல் தடுமாறினோம்.  ஆனால் திங்கள்கிழமை தான் லாபத்திற்கு வாழைத்தார்கள் விலைக்கு போனது. இதனால் மகிழ்ச்சிதான். இருந்தாலும் பொங்கல் போன்று பண்டிகை காலங்களில் மட்டும்தான் விலை கிடைக்கிறது.
 மற்ற காலங்களில் வாழை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயம் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளோம். இதனால் கரூர் மாவட்டத்தில் வாழைப்பழ ஜாம் போன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், அவ்வப்போது போதிய விலை கிடைக்கும். இதனை தமிழக அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். 
பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்: கரூரில் கூரைப்பூ, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தீவிரமாக நடைபெற்றது.வீடுகளில் வைக்கப்படும் கூரைப்பூக்கள் கரூர் மாவட்டத்தின் சேமங்கி, நடையனூர், நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர், புகழூர், தவிட்டுப்பாளையம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
 உழவர்சந்தை, பேருந்துநிலைய ரவுண்டானா, பேருந்துநிலையம், சர்ச் கார்னர், திருமாநிலையூர் ரவுண்டானா, லைட்ஹவுஸ்கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைத்திருந்தனர். ஒரு ஜோடி கூரைப்பூக்கள் ரூ.20 முதல் 30 வரை விற்கப்பட்டது.
 இதுபோல மஞ்சள் கொத்துக்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கரூர் மாவட்டத்தின் வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி ராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மஞ்சள் கொத்துக்கள் ஜோடி ரூ.40 வரை விற்பனையானது.
 பல ஆண்டுகளுக்கு பிறகு பிளாஸ்டிக் தட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழை இலை அதிகளவில் விற்பனையானது. ஒரு வாழை இலை ரூ.3 முதல் ரூ.5 வரைக்கும், ஒரு கட்டு ரூ.250 வரைக்கும் விற்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com