8 ஒன்றியங்களில் ரூ.1.79 கோடியில் குடிநீர்த்திட்டப்பணிகள்
By DIN | Published On : 24th January 2019 11:10 AM | Last Updated : 24th January 2019 11:10 AM | அ+அ அ- |

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நிகழாண்டில் 14,544 குடும்பங்களுக்கு ரூ.1.79கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, புஞ்சைகடம்பங்குறிச்சி, காதப்பாறை, மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், ஆட்சியர் கூறியது:
கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் கோடையில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள கிராமங்கள் என அறியப்பட்டதன் அடிப்படையிலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், நீரேற்று நிலையங்கள், நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தாய் திட்டத்தின் கீழ், ரூ.63.30 லட்சத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு காலனி, பஞ்சமாதேவி அக்ரஹாரம், கவுண்டன்புதூர் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த 5,903 குடியிருப்புகள் பயன்பெறும்.
புஞ்சை கடம்பன்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் நீரேற்றும் அறை ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, கரூர் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பண்டுதகாரன்புதூர் ஊராட்சியில் ஆத்தூர் பூலாம்பாளையத்தில் ரூ.17 லட்சத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு, க.பரமத்தி ஒன்றியம், எளவனூரில் ரூ.7 லட்சத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவு, குளித்தலை ஒன்றியம், நல்லூர் கிராமத்தில் ரூ.6 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு,
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி, கே.பி.குளம் ஊராட்சியில் ரூ.3.12 லட்சத்தில் 10,000லிட்டர் கொள்ளவு, பெருமாள்கவுண்டன்பட்டி, தொண்டைமான்கினம் ஊராட்சிகளில் தலா 5 லட்சத்தில் தலா 30,000 லிட்டர் கொள்ளவு, வெங்கப்பட்டி ஊராட்சியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, நீர்வழிப்பாதை அமைக்க குழாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடவூர் ஒன்றியத்தில் ஆலத்தூர், கே.ராசப்பட்டி, கீரனுரர் மற்றும் அய்யம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் தலா 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள நான்கு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் ரூ. 38.10லட்சம் மதிப்பீட்டிலும், வீரையம்பட்டி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் கட்டப்பட்டு வருகின்றன.
இதுபோல, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் மேலவளையம்பட்டி, தெலுங்கப்பட்டி, மேட்டுக்காடு ஆகிய ஊராட்சிகளில் தலா 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் ரூ.19.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நிகழாண்டில் ரூ.1.79 கோடியில் குடிநீர்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 14,544 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது. கட்டுமானப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பரமேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் சங்கர், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.