அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் ஆய்வு

கரூரில் ரூ. 269.59 கோடியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை

கரூரில் ரூ. 269.59 கோடியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் கூறியது:
கரூர் மாவட்ட மக்களுக்கு கிடைக்கப் பெற்ற தமிழக அரசின் திட்டங்களுள் மிக முக்கியமானதும், அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பைப் பெற்ற திட்டமுமாக அனைவராலும் பேசப்படுவது காந்தி கிராமத்தில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும்.
850 படுக்கைகள் கொண்ட 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய வகையில் உள்ள இந்த மருத்துவக் கல்லூரி கட்டுமானப்பணிகள் கடந்தாண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு விரைவாக நடைபெறுகிறது.  ரூ. 75.79 கோடியில் 3.20 லட்சம் சதுரடியில் வகுப்பறைக் கட்டடங்களும், ரூ. 122.79 கோடியில் 5.58 லட்சம் சதுரடியில் மருத்துவமனைக் கட்டடங்களும், ரூ. 71.01 கோடியில் 2.99 லட்சம் சதுரடி பரப்பில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ. 269.59 கோடியில் 11.78 லட்சம் சதுரடியில் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன.  இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து பணிகளும் முடிவுற்றதால் மத்திய அரசின் இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது என்றார்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரோஸி வெண்ணிலா, வருவாய்க் கோட்டாட்சியர் சந்தியா, மருத்துவக் கட்டடங்கள் உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மஹாவிஷ்ணு, வட்டாட்சியர் சக்திவேல், நுகர்வோர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலைத் தலைவர் நெடுஞ்செழியன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ.ஆர். காளியப்பன் (நெரூர்), எஸ்.திருவிகா(கரூர் நகரம்), அரவக்குறிச்சி நிலவள வங்கி துணைத் தலைவர் மார்க்கண்டேயன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் பசுவை பி. சிவசாமி, கமலகண்ணன், நகர்மன்ற முன்னாள் தலைவர் எம். செல்வராஜ், தானேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com