வேலூர் மக்களவைத் தொகுதிக்கு பாஜக பெண் வேட்பாளரை நிறுத்த வேண்டும்
By DIN | Published On : 05th July 2019 09:03 AM | Last Updated : 05th July 2019 09:03 AM | அ+அ அ- |

வேலூர் எம்.பி தொகுதிக்கு பாஜக சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என கட்சியின் தலைமைக்கு தமிழக பாஜக காரியதரிசி தலித் பாண்டியன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பது: அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, தமிழகத்தில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா பிரச்னை தொடர்பாக தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்தது. இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆக. 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பாஜவிற்கு ஒதுக்க வேண்டும். மேலும் குறிப்பாக பெண் வேட்பாளரை அங்கு அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து திமுகவில் கனிமொழி, தமிழச்சிதங்கபாண்டியன், காங்கிரசில் இருந்து ஜோதிமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதுபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவின் பெண் வேட்பாளர் தேர்வு செய்தால் தமிழகத்தின் உரிமைகள் குறித்தும், எதிர்க்கட்சியினருக்கு சவால் அளிக்கும் வகையிலும் மக்களவையில் பாஜக உறுப்பினராகக் குரல் கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.