வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th July 2019 09:02 AM | Last Updated : 05th July 2019 09:02 AM | அ+அ அ- |

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான உதவித்தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.7.2019 முதல் 30.9.2019 வரையான காலாண்டில் , 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
அதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற குறிப்பிட்ட காலாண்டில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவர். குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.
உச்ச வயது வரம்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிவகுப்பினருக்கு 45, இதர வகுப்பினருக்கு 40 ஆகும். உதவித்தொகை பெற விரும்புவோர் தினசரி பயிலும் மாணவராகவோ, அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது.
விண்ணப்ப படிவங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 1.7.2019 ஆம் தேதி தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.