கரூர், குளித்தலையில் 13-இல் மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 08th July 2019 07:50 AM | Last Updated : 08th July 2019 07:50 AM | அ+அ அ- |

வரும் 13 ஆம் தேதி கரூர், குளித்தலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளனர் மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கிறிஸ்டோபர், செயலரும், சார்பு நீதிபதியுமான மோகன்ராம்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் சனிக்கிழமை (ஜூலை 13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விபத்து இழப்பீடு வழக்குகள், வேலையாள் இழப்பீடு வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், கடனுறுதி சீட்டு (புரோ நோட்டு), பாகப்பிரிவினை வழக்குகள், உரிமையியல் வழக்குகள், திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் (விவாகரத்து தவிர), காசோலை மோசடி, குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் சமாதானம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள், வங்கிகள் தாக்கல் செய்துள்ள கல்வி கடன், விவசாயக் கடன் மற்றும் இதர அனைத்து வங்கிக் கடன் வழக்குகளும் தீர்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளனர்.