சின்னமநாயக்கனூர் கோயிலில் மாடு மாலை தாண்டும் விழா
By DIN | Published On : 19th July 2019 05:09 AM | Last Updated : 19th July 2019 05:09 AM | அ+அ அ- |

சின்னமநாயக்கனூர் மாரியம்மன், காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாடு மாலை தாண்டும் விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
இக்கோயிலுக்கான மாடுகள் மாலை தாண்டும் விழா கோலக்கம்பளி மந்தையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முன்னதாக, நிகழாண்டிற்கான திருவிழா கடந்த 7-ம் தேதி அன்று பூ போட்டு 14 மந்தையர்களுக்கு அழைப்பு விடுத்து திருவிழா தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் விரதம் இருந்து கோலக்கம்பளி மந்தையில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் சாமிகளுக்கு தினமும் மூன்று கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.
திருவிழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு கரகம் பாலித்து வான வேடிக்கையுடன் சுவாமிகள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், புதன்கிழமை கோயில் முன் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக எருது மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடந்தது. முன்னதாக திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுற்றுக்கணக்கான காளைகளுடன் வந்திருந்த 14 மந்தையர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் முன்பாக அனைத்து மந்தைகளின் மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க கோலக்கம்பளி நாயக்கர் மந்தையின் எதிரே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு எல்லைசாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அபிஷேகம செய்து அனைத்து மாடுகளுக்கும் புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அங்கிருந்து கோலக்கம்பளிநாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட மாலையால் ஆன எல்லை கோட்டை நோக்கி மாடுகள் ஓடி வந்தன. இதில் முதலாவதாக ஓடிவந்த மாட்டின் மீது, கோயில் வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை தூவி எழுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது.