Enable Javscript for better performance
மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    தோகைமலையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு நாள் விழாவில் 197 பயனாளிகளுக்கு ரூ.47.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் பேசியது: 
    பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுவதுமாக அறிந்து கொள்ளவும், அரசின் திட்டங்களை பெறுவதற்கும் பயனாளிகள் எந்தெந்த துறை அலுவலகங்களை அணுக வேண்டும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அனைவரும் அறிந்துகொள்ள இம்முகாம்கள் ஒரு வாய்ப்பாக அமைகின்றன.  
    நலத்திட்ட உதவிகளைப் பெற என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்களே இங்கு நேரடியாக வந்து எடுத்துக்கூறி, தங்கள் துறை சார்ந்த திட்ட விளக்க உரைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். 
    பொதுமக்கள் ஒவ்வொருவரும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறையினர் அரங்குகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளைக் கேட்டறிந்து தங்களுக்கு எந்த வகையில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டுத்தெளிவு பெற வேண்டும்.  
    மேலும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். 0-18 வயது  குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக இளைஞர் நீதி குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. 
    அரசு வேலை எதிர்பார்ப்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கட்டணமில்லாமல் நடத்தப்படும் பயிற்சியில் பங்கேற்கலாம். நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு அரசு 100 சதவீதம் மானியம் வழங்குகிறது.  விவசாயிகள் அதை பயன்படுத்தி அதிக பரப்பில் குறைந்த நீரில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும்.  அத்துடன் குறைந்த தொகையை பயிர்க் காப்பீடாக செலுத்தி இயற்கை சீற்றங்களிலிருந்தும், எதிர்பாராத இழப்புகளிலிருந்தும் முதலீட்டுத் தொகையை காத்துக் கொள்ளலாம். 
    அரசு மானியத்தில் வீட்டுத்தோட்டம் அமைக்க தரமான விதைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்ய வேண்டும் அப்போதுதான், பனைப்புழுக்களை அழிக்க முடியும்.  விவசாயிகள் அனைவரும் "கிசான் அட்டை" பெற விண்ணப்பிக்கலாம். 
    எந்தப் பிணையும் இல்லாமல் ரூ.1.60 லட்சம் வரை விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது. 
    எனவே, விவசாயிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள், அநீதிகள் குறித்து புகார் தெரிவிக்க 181 என்ற கட்டணமில்லா  தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
    நிகழ்ச்சியில், குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் எம். லியாகத், உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, வேளாண் இணை இயக்குநர் ஜெயந்தி, ஆதிதிராவிட நல அலுவலர் லீலாவதி, மாற்றுத்திறாளிகள் நல அலுவலர் ஜான்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, குளித்தலை வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai