Enable Javscript for better performance
வாழ்க்கைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை புத்தகங்கள் தரும்:  கவிஞர் தங்கம் மூர்த்தி பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    வாழ்க்கைச் சிக்கல்களுக்கான தீர்வுகளை புத்தகங்கள் தரும்:  கவிஞர் தங்கம் மூர்த்தி பேச்சு

    By DIN  |   Published on : 25th July 2019 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் புத்தகங்களில் புதைந்து கிடக்கின்றன என்றார் கவிஞர் தங்கம் மூர்த்தி.
    கரூரில் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து புதன்கிழமை நடந்த ஆறாம் நிகழ்வில் பங்கேற்று நூல்கள் எனப்படுவது  யாதெனில் என்ற தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி மேலும் பேசியது:
    ஆண்டுக்கு 13 கோடி புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 234 வார்த்தைகளை வாசிக்க முடியும். ஆனால் இன்றைய தலைமுறையினரிடையே வாசிப்பு குறைந்துவிட்டது. 
    பொன்னியின் செல்வன் வெளியான காலத்தில் வரிவரியாக புத்தகங்கள் வாசிக்கப்பட்டன. ஆனால் இப்போது புத்தகங்களை புரட்டி, புரட்டிப் பார்த்தபின் முதலில் என்ன, கடைசியில் என்ன என்பதை பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள்.  இதனால் வாசிப்பவருக்கு புத்தகத்தை படைத்த எழுத்தாளனின் சுவை, ருசி தெரியாமல் போய்விடுகிறது.  எந்தப் புத்தகம் உங்களது வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறதோ அதைப் படியுங்கள். 
    பெண் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுத்து வளர்க்கலாம். ஆனால் செல்லிடபேசி கொடுத்து வளர்க்காதீர்கள்.  இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையைச் சுயநலமாக வாழும் போக்கைத்தான் பார்க்க முடிகிறது. வாழ்க்கைச் சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் புத்தகங்களில் புதைந்து கிடக்கின்றன. 
    வானம் பார்த்து மகிழ்ந்தோம், மயில் , யானை, பார்த்து மகிழ்ந்தோம். இப்போது இதையெல்லாம் விட்டுவிட்டோம். கலர், கலராய் மிட்டாய் சாப்பிடுவதில தொடங்கி கலர், கலராய் மாத்திரை சாப்பிடுவதே இன்றைய பெரும்பாலான மனிதர்களின்  வாழ்க்கையாக முடிகிறது.  புத்தங்கள் மூலம்தான் அகத்தில் இருக்கும் குறைகள், அழுக்கு, இருட்டு  விலக்கப்படுகிறது.  
    புதுக்கோட்டையில் உள்ள ஞானாலாய புத்தகம் மையத்தில் பாரதியாரின் சுதேசமித்திரனின் இதழை பார்க்கலாம். தினமணியின் முதல் இதழைப் பார்க்கலாம். பெரியாரின் கையெழுத்து, பாரதிதாசனின் முதல் கையெழுத்து அங்கு இருக்கிறது. மகாத்மா காந்தி சென்னையில் வந்து பேசியதற்கு பாராட்டுத் தெரிவித்து பாரதியார் எழுதிய கடிதமும் உள்ளது. யாருக்கும் தலைவணங்காத பாரதிதாசன், பாரதியாரின் மனைவியை பார்த்தவுடன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய குறிப்புகளும் உள்ளன. இதுபோன்ற செய்திகள் நூல்கள் மூலம்தான் கிடைக்கின்றன.  தொடர்ந்து வாசித்தால் மட்டுமே உலக அறிவு கிடைக்கும் என்றார் அவர். 
    சக்தி நர்சிங் கல்லூரித் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார்.  இதில் முனைவர் இனியன் அ. கோவிந்தராஜு, சூர்யாகதிரவன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், விகேஏ குழுமத் தலைவர் விகேஏ. கருப்பண்ணன் ஆகியோர் வாழ்த்தினர். ஆரா இண்டர்நேசனல் எக்ஸ்போர்ட் ஆரா. பழ. ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். ஆசிரியர் காமராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai