முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 30th July 2019 09:38 AM | Last Updated : 30th July 2019 09:38 AM | அ+அ அ- |

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 327 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவற்றை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கண்பார்வை குறைபாடு உள்ள 7 நபர்களுக்கு நவீன அதிரும் மடக்கு குச்சியையும், 4 மாணவ, மாணவிகளுக்கு காதொலி கருவிகளையும், 5 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும், ஒரு பயனாளிக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டரையும், பாரத ஸ்டேட் வங்கி கரூர் பிரதான கிளை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் முத்ரா கடன் மற்றும் 2 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் பயிர் கடனிற்கான காசேலையினையும் ஆட்சியர் வழங்கினார்.
மேலும் தான்தோணி அன்பாலயம் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர் கோவையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான யோகா போட்டியில் பங்கேற்று பொதுப் பிரிவில் 16 பரிசுகளையும், சிறப்பு பிரிவில் 27 பரிசுகளைப் பெற்றதற்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், துணை ஆட்சியர் (பயிற்சி)விஷ்ணுபிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.