குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியரகத்துக்கு வந்த கிராம மக்கள்
By DIN | Published On : 30th July 2019 09:38 AM | Last Updated : 30th July 2019 09:38 AM | அ+அ அ- |

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெள்ளியணை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த கிராமமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பது: எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தற்போது ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தும் வற்றிப்போனதால் குடிநீர் கடந்த மூன்று மாதங்களாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகே உள்ள தோட்டங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். எனவே விரைந்து எங்களுக்கு குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
குளித்தலை நெய்தலூர் காலனியைச் சேர்ந்த விவசாயி நடராஜன்(45), தனது மனைவி லதா, குழந்தைகளுடன் வந்து திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் கடன் வசூலில் கடுமையாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துச் சென்றார்.