"குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை'

குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவோருக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.

குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவோருக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில் கரூரில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வுப் பேரணி, உறுதியேற்பு நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம், வாகனங்களில் வில்லைகளை ஒட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளை கரூர் கோட்டாட்சியரகத்தில் தொடக்கி வைத்து மேலும் அவர் கூறியது: எதிர்கால இந்தியாவை உருவாக்கும் சக்தி படைத்தவர்கள் இன்றைய குழந்தைகளே. தமிழ்நாட்டில், குழந்தைகளை தொழிலாளர்களாக நடத்துவது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும், சட்டப்படி தண்டனைக்குரியது. குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986-ன்படி 14 வயதிற்குட்பட்ட எந்தக் குழந்தைகளையும் எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  இச்சட்ட விதிகளை முதன்முறை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை, 2-ஆம் முறை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கும் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். வளர வேண்டிய பருவத்தில் குழந்தைகளுக்கு நல்ல வழிமுறைகளை சொல்லித்தந்து கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட அனைவரையும் கல்வி கற்க செய்து குழந்தை தொழிலாளர் அற்ற மாவட்டமாக நமது கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக  கரூர் வருவாய் கோட்டாட்சியரகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடிந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.
கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, தொழிலாளர் நல உதவி ஆணையர் பொ. கிருஷ்ணவேணி, வட்டாட்சியர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com