சுடச்சுட

  

  பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் வியாழக்கிழமை தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 
  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணை தலைவர் நல்லம்மாள் தலைமையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அரசு செவிலியர்கள் சங்க மாநில துணை தலைவர் நல்லம்மாள், மாவட்டத் தலைவர் கார்த்திக், செயலாளர் செல்வராணி, பொருளாளர் தனலட்சுமி உள்ளிட்ட 4 பேரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஸி வெண்ணிலா தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். 
  செவிலியர்கள் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் விடிய, விடிய  தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 ஆம் நாளாக வியாழக்கிழமை செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் மீது அரசின் விதிமுறைப்படி குற்ற வழக்கு பதிவு செய்வது,  தண்டனை விவரங்கள் அடங்கிய பதாகை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த செவிலியர்கள் அந்த பதாகையை அகற்றி அப்புறப்படுத்தினர்.   
  இவர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
  தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்கப் பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் மாலை 5 மணியளவில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதில் செவிலியர்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர். 
  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நல்லம்மாள் கூறியது: 
  ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் செவிலியர்களுக்கு சம்பந்தமில்லாத பணி வழங்கப்படாது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு மீண்டும் வேலை வழங்கவும் அரசுக்கு கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 
  இதையடுத்து எங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம். வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல பணிக்குத் திரும்புவோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai