கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய மருத்துவர்கள்
By DIN | Published On : 18th June 2019 09:07 AM | Last Updated : 18th June 2019 09:07 AM | அ+அ அ- |

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கரூரில் மருத்துவர்கள் திங்கள்கிழமை கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளி இறந்ததால் நோயாளியின் உறவினர்கள் அங்குபணியில் இருந்த இரு இளநிலை மருத்துவர்களைத் தாக்கினர். இதைக்கண்டித்து மேற்குவங்க அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜிநாமா கடிதம் அனுப்பினர். மேலும் நாடு முழுவதும் திங்கள்கிழமை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கரூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் 220 பேர் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 420-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் வெளிநோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்தனர்.