நாடக நடிகர்களிடம் நடிகர் விஷால் வாக்குசேகரிப்பு
By DIN | Published On : 18th June 2019 09:06 AM | Last Updated : 18th June 2019 09:06 AM | அ+அ அ- |

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் கரூரில் உள்ள நாடக நடிகர்களைச் சந்தித்து திங்கள்கிழமை வாக்குசேகரித்தனர்.
2019 - 22 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, கரூருக்கு திங்கள்கிழமை மாலை பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் ஆகியோர் வந்தனர். அப்போது நாடக நடிகர் மத்தியில் விஷால் பேசியது: நடிகர் சங்கத் தேர்தலில் காசு வாங்கிவிட்டு எதிர்த்து வாக்களித்துவிடாதீர்கள். அப்படி வாக்களித்தால் உங்களின் எதிர்கால கனவு, உங்கள் குழந்தைகளின் எதிர்கால கனவு காணாமல் போய்விடும். உங்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். உடனே எப்படி கட்ட முடியும். இதையெல்லாம் புரியாமல் சிலர் நம்மிடம் இருந்தவர்களே, நமக்கு எதிராக இருக்கிறார்கள். எனவே பணத்திற்கு வாக்களித்து ஏமாந்துவிடாதீர்கள் என்றார்.