பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ஆதிதிராவிடர் பள்ளிகளில்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 229 மனுக்கள் வரப்பெற்றன.  பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவற்றை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கண் பார்வை குறைபாடுள்ள ஒரு மாணவனுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கிக் காட்டும் கருவியும், கண் பார்வையற்ற ஒரு பயனாளிக்கு ரூ.3,550 மதிப்பில் நவின அதிரும் மடக்கு குச்சியையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களையும் பாராட்டினார். 
கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் அளித்த மனுக்கள் விவரம்: பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அக்கட்சியினர் வழங்கிய மனுவில் காவிரி, அமராவதி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தடுக்க அரசே மணல் குவாரியை ஏற்று நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மாயனூர் வட்டார மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், 300 மாட்டுவண்டித்தொழிலாளர்கள்  நலன்கருதி மாயனூர் காவிரி ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.  வெள்ளியணை நடுமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,  காலிக்குடங்களுடன் ஆட்சியரிடம் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் திறக்கும் ஆபரேட்டர் பாரபட்சம் காட்டுவதால் அவரை மாற்றி, கூடுதலாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.  நாம் தமிழர் கட்சியினர் வழங்கி மனுவில், விரைந்து மே 1 நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, உதவி ஆணையர் கலால் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கணேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com