சுடச்சுட

  

  குழந்தைகள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

  By DIN  |   Published on : 26th June 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குழந்தைகள் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
   கரூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் விடுதிகள், இல்லங்கள் பதிவு விவரங்கள் ஆய்வுக்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:  
  கரூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பள்ளிகளில் விடுதிகள் நடத்தப்படுகின்றதா என்று கல்வித்துறை ஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  தனியார் மற்றும் தனி நபரால் நடத்தப்பட்டு வரும் விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கு ஒருவார காலத்திற்குள் பதிவுசெய்யத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தும் வகையிலான அறிவிப்பாணைகளை வழங்க வேண்டும். ஒருவார காலத்திற்கு பிறகும் எந்த முயற்சியும் செய்யாத இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது சட்டத்திற்குட்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதற்கான விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
  பதிவு பெறாத விடுதிகள் ஏதேனும் கரூர் மாவட்டத்தில் செயல்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யப்படாமல் விடுதிகள் நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் 94889 85964  என்ற  எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 
  குழந்தை திருமணங்களை நடத்தி வைப்போர், குழந்தை தொழிலாளாரை பணியில் அமர்த்துவோர், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். 
  மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  
  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவிதா, மாவட்ட சமூநல அலுவலர் ரவிபாலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லீலாவதி, குழந்தை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai