போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 04th March 2019 08:32 AM | Last Updated : 04th March 2019 08:32 AM | அ+அ அ- |

கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டுவிழாவில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்று, இப்போது கல்வித்தரம் உயர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். ஒரு காலத்தில் படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என்றால் கேரளம் என்பார்கள். ஆனால் இப்போது தமிழகம்தான் முதலிடம் என்ற நிலைக்கு உயர்த்தியவர் ஜெயலலிதா.
உயர்கல்வி படிப்பவர்கள் சதவீதம் தேசிய அளவில் 25 சதவீதம் என்றால், தமிழகத்தில் 46.9 சதவீதமாக உள்ளது. ஆங்கில மொழி படித்தால்தான் உலகளவில் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்பதால்தான் தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தை கொண்டுவந்துள்ளது. கல்வி மிகவும் முக்கியம். அதை கொடுக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது என்றார்.
விழாவிற்கு பள்ளி தாளாளர் ஆர். மணிவண்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கீதா மணிவண்ணன் வரவேற்றார். விழாவில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, அதிமுக நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றோருக்கு விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.