சுடச்சுட

  

  வீடின்றி தவித்த முதியவரின் குடும்பத்திற்கு வீடுகட்ட உடனடி நடவடிக்கை

  By DIN  |   Published on : 16th March 2019 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனநலன் குன்றிய மனைவி, மகளுடன் குடியிருக்க வீடு இன்றி தவித்த, முதியவரின் குடும்பத்துக்கு வீடு கட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிச்சை (60). இவரது மனைவி பூரணம் (52), மகள் இந்திராணி (27).  இவர்களில்  பிறக்கும் போதே இந்திராணி மனநலன் குன்றி பிறந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு  காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பூரணமும் மனநலன் குன்றியவராக மாறினார்.
  கூலி வேலைக்குச் சென்று வந்த பிச்சை, மனைவி மற்றும் மகளைப் பராமரிப்பதற்காக கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பே வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். ரேஷன் அரிசி வாங்கும் இவர்,   சாம்பார் போன்றவற்றை ஊர்மக்களிடம் வாங்கி பயன்படுத்துவராம். மேலும், குடிசையும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
  இவரது நிலையைக் கண்ட பாரப்பட்டி தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் க. அய்யாசாமி, இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷிடம் குடும்ப விவரத்தை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து குளித்தலை கோட்டாட்சியர் எம். லியாகத் ஆய்வு செய்ததில்  விவரம் உண்மைத் தெரிய வந்தது. இதையடுத்து பிச்சைக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், பசுமைவீடுகள் திட்டத்தின் கீழ், ரூ.2.10 லட்சத்தில் வீடுகட்டுவதற்கான ஆணையையும் அண்மையில் வழங்கினர். இதைத் தொடர்ந்துபூமி பூஜையும் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai