சுவரொட்டி விளம்பரங்களில் சட்டவிதிகளை மீறும் அச்சகங்களுக்கு உரிமம் ரத்து

சுவரொட்டி விளம்பரங்களில் தேர்தல் ஆணையத்தின் சட்டவிதிகளை மீறும் அச்சகங்களின் உரிமம் ரத்து

சுவரொட்டி விளம்பரங்களில் தேர்தல் ஆணையத்தின் சட்டவிதிகளை மீறும் அச்சகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான த.அன்பழகன் தெரிவித்துள்ளார். 
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில்  தேர்தல் நடத்தை விதிமுறைகள்குறித்து அச்சக உரிமையாளர்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அச்சக உரிமையாளர்கள்  ஆணையத்தின் அறிவுரைகளின்படியும், விதிமுறைகளைப்பின்பற்றியும் நடக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான சுவரொட்டி விளம்பரங்களில் அச்சகத்தின் உரிமையாளர்,  வெளியிடுபவரின் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும். அவ்வாறான விளம்பரங்கள், அறிவிப்புகள் அச்சடித்த மூன்று நாள்களுக்குள், 4 பிரதிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும், சட்டப்பிரிவு 127 ஏ (2)ன் கீழ்  வெளியிடுபவர் கொடுத்த உறுதிமொழி  நகலினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த சட்டவிதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படின் அச்சக உரிமம் ரத்து செய்யப்படும். தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரம், சுவரொட்டிகளை அச்சடிப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட படிவத்தில், சம்மந்தப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுபவரிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும். 
எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டது, செலவு ஆகியவற்றின் விவரங்கள் கண்டிப்பாக படிவத்தில் இடம்பெறவேண்டும். இவ்வாறான தகவல்கள் ஒட்டு மொத்தமாக இல்லாமல், தனித்தனியாக ஒவ்வொரு நிகழ்வாக  சுவரொட்டி, துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டதற்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 
இந்தச் சட்டத்தை  மீறும் நபர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனையோ  அல்லது  ரூ.2000  அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார் அவர்.
மாவட்ட வருவாய் அலுவலர்கள் ச.சூர்யபிரகாஷ்,  சிவப்பிரியா (நிலமெடுப்பு), கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி  உள்ளிட்ட அலுவலர்கள்கூட்டத்தில் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com