சமுதாயம் பயனடையும் வகையில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்

உயர்கல்வி பயிலும் மாணவர்கள்  சமுதாயம் பயன்பெறும் வகையில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்

உயர்கல்வி பயிலும் மாணவர்கள்  சமுதாயம் பயன்பெறும் வகையில் சிறந்து விளங்க வேண்டும் என்றார் சென்னை டைசிஸ் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் சசிகாந்த் ஜெயராமன்.
கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற கல்லூரியின் 265 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி மேலும் அவர் பேசியது: 
எப்போதும் நம்மை சார்ந்தவர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன் என்கிற கொள்கையை கடைப்பிடியுங்கள். அந்த கொள்கை நிச்சயம் வாழ்வில் உங்களை உயர்த்தும்.  உலகிலேயே நம் தாய் ஒருவர்தான் சுயநலம் இல்லாமல் தன் பிள்ளைகள் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பவள். தாயின் அன்பு தூய்மையானது. அந்த தாய்க்கு அடுத்தபடியாக நம் நாட்டில் வசித்தவர் அப்துல்கலாம். அவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி. சாதி, மதம் கடந்து அனைவராலும் ஏற்கக்கூடிய ஒரு மாமனிதர். 
நாடெங்கும் சென்று இளைஞர்களுக்கு அறிவை ஊட்டியவர்.  தன்னலம் கருதாமல், தன் வாழ்நாளை பொறியியல் துறைக்கும், நாட்டுக்கும் அர்ப்பணித்தவர். நாட்டின் ஜனாதிபதியானபோது தன்னுடன் வெறும் ஆடைகள் அடங்கிய இரு சூட்கேஸ் மட்டும் கொண்டு சென்றவர். அப்பதவியை விட்டு வெளியேறும்போதும் அதே சூட்கேசுடன்தான் வந்தார். யாருக்காக துறவு வாழ்க்கை பூண்டார் என்பதை ஒவ்வொரு மாணவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவரது கனவை நனவாக்க ஒவ்வொரு இளைஞர்களும் முன்வரவேண்டும். ஒருவர் படித்த படிப்பு ஒரு சிறிய குழந்தையின் குறையை போக்கும் என்றால் அப்போதுதான் படித்த படிப்பு முழுமை பெறுகிறது. அப்துல்கலாமை போல இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அ.புனிதா தலைமை வகித்தார். கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவர் ஹரி பிரசாத் வரவேற்றார். உதவி பேராசிரியர் செல்வன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com