கல்யாண பசுபதீசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம்
By DIN | Published On : 22nd March 2019 09:02 AM | Last Updated : 22nd March 2019 09:02 AM | அ+அ அ- |

கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
கொங்கு நாட்டின் சிவத் தலங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்கும் கரூர் கல்யாண பசுபதீசுவரர் கோயிலில் பசுபதீசுவரர் அருள்மிகு அலங்காரவல்லி மற்றும் செளந்திரநாயகியுடன் பக்தர்களுக்கு காட்சிதந்து வருகிறார். கோயில் பங்குனித்திருவிழா கடந்த 13 ஆம் தேதி துவஜாரோகணம் எனும் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து சுவாமி கடந்த 14 ஆம் தேதி நந்தி, அன்னவாகனத்திலும், 15 ஆம் தேதி பூத, பூதகி வாகனத்திலும், 16 ஆம் தேதி ரிஷிப வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 17 ஆம் தேதி திருக்கயிலாய வாகனத்திலும், 18 ஆம் தேதி சுவாமி அம்பாளுடன் அப்பிப்பாளையத்தில் எழுந்தருளி இரவு யானை வாகனத்தில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பசுபதீசுவரர் அலங்காரவல்லி, சௌந்திரநாயகி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து பக்தர்கள் தேரோட்டம் நடைபெற்றது. தேர் கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தீர்த்தவாரி, கொடியிறக்கமும், 24 ஆம் தேதி ஊஞ்சல் உற்ஸவம், 25 ஆம் தேதி பிராயச்சித்த அபிஷேகம், மாலை சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷிபவாகனத்தில் திருவீதி உலா வருதலுடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் எம்.சூரியநாராயணன், செயல் அலுவலர் எம்.வேல்முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...