தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 06th May 2019 03:31 AM | Last Updated : 06th May 2019 03:31 AM | அ+அ அ- |

கோம்புபாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க உடனே கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மின்வாரியத் துறையினர் தோட்டங்களில் உள்ள பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.
கோம்புபாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்வயர்கள் தாழ்வாக அதாவது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 அடி உயரத்தில்தான் செல்கின்றன. மிகவும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் அப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளோ அல்லது விவசாயிகளோ மின்சாரம் தாக்குதலால் பலியாகும் நிலை உள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியினர் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே விரைந்து தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.