முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது: அன்புமணி ராமதாஸ்
By DIN | Published On : 15th May 2019 08:27 AM | Last Updated : 15th May 2019 08:27 AM | அ+அ அ- |

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
ஸ்டாலின் காவிரியில் கதவணை கட்டுவேன் எனக் கூறுவதற்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கதவணை கட்டுவேன் எனக் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆளுங்கட்சியினர் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும். பாமக நீர் மேலாண்மை, கல்வி தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இக்கூட்டணியில் இணைந்துள்ளோம். கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. எங்களது நோக்கமே வளர்ச்சிதான்.
ஸ்டாலின் வளர்ச்சித்திட்டங்களை பேசாமல் கொச்சையாக, மோசமான வார்த்தைகளால் தனி நபர் விமர்சனம் செய்து வருகிறார். மாறாக, நாங்கள் வளர்ச்சித் திட்டங்களை பேசுகிறோம். இதனிடையே சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறார். எதிரணியினர் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யப் போகிறேன் என்கிறார். மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.
காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் ஸ்டாலின். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தவர் கலைஞர். ஆலை விரிவாக்கம் செய்ய கையெழுத்திட்டவர் ஸ்டாலின். கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது திமுக.
காவிரியில் துரோகம் செய்ததும் திமுக தான். தமிழகத்திற்கு கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் மிக மிக அவசியம். இதன் மூலம், தமிழகத்துக்கு 200 டிஎம்சி கிடைக்கும்; 25 மாவட்டத்திற்கு பயன்படும். எதிரணியினர் சொல்லலாம். ஆளுங்கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்றார். கூட்டத்தில், பாமக கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன், அமைச்சர்கள் தங்கமணி, கேசி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.