அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல் மீது இரு பிரிவுகளில் வழக்கு
By DIN | Published On : 15th May 2019 08:26 AM | Last Updated : 15th May 2019 08:26 AM | அ+அ அ- |

தேர்தல் பிரசாரத்தின்போது, இந்து மதத்தினரை இழிவாகப் பேசியது உள்பட இரு பிரிவுகளின் கீழ், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த 12 ஆம் தேதி இரவு அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஷா கார்னர் உள்ளிட்ட இடங்களில் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது, பள்ளப்பட்டி ஷா கார்னரில் பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்றார். இவ்வாறு
இந்து மதத்தினரை இழிவுபடுத்திப் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸில் செவ்வாய்க்கிழமை செய்தார். இதையடுத்து போலீஸார் அவர் மீது 153-ஏ (மதப் பிரச்னையை தூண்டும் விதத்தில் பேசுதல்), 295-ஏ (ஒரு மதம் குறித்து இழிவாகப் பேசுதல்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.