சுடச்சுட

  

  நாளை பிரசாரம் நிறைவு: வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவு

  By DIN  |   Published on : 16th May 2019 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரவக்குறிச்சி இடை த்தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை (மே17) யுடன் முடிவடைவதால் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த.அன்பழகன்.
     இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி , வரும் 17-ம்தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ, அப்பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவோ  கூடாது.  மேலும், தேர்தல் தொடர்பான தகவல்களை ஒளிப்பதிவிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது எவ்வித மின்னணு தகவல் தொடர்பு முறையிலோ காட்சிப்படுத்தக்கூடாது.
  இசை நிகழ்ச்சிகள் அல்லது எவ்வித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் 2 வருட சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது  இரண்டுமோ விதிக்கப்படும். தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட, அத்தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வெள்ளிக்கிழமை (மே 17) மாலை 6 மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(1)(பி) -ன் படி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளோ, வாக்கெடுப்புகளோ, கணக்கெடுப்புகளோ தேர்தல்  நாளுக்கு  48 மணிநேரத்திற்கு முன்பாக வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.      

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai