கந்துவட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி
By DIN | Published On : 16th May 2019 08:24 AM | Last Updated : 16th May 2019 08:24 AM | அ+அ அ- |

கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் கோதூர் ரோடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகாஷ்(40) என்பவர், குப்புச்சிபாளையத்தில் நிதிநிறுவனம் நடத்தி வரும் பெரியசாமி(37) என்பவரிடம் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்தாததால் பெரியசாமி கடந்த 11 ஆம் தேதி தனது ஆட்களுடன் பிரகாஷ் வீட்டிற்குள் புகுந்து பிரகாஷ் மற்றும் அவரது மகனைத் தாக்கியுள்ளார்.
இதுதெடார்பாக பிரகாஷின் மனைவி காளீஸ்வரி(35) அளித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து பெரியசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மேலும் பணம் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பான புகார்களை 93446 13343 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.